டெல்லி: தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி, இன்று (செப்.17) தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, புவனேஸ்வரில் 26 லட்சம் பிஎம் ஆவாஸ் யோஜனா வீடுகளை திறந்து வைக்கிறார். இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் ஆளுமை, பணி வலிமையால், நீங்கள் அசாதாரணமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளீர்கள். நாட்டின் செழிப்பையும், மதிப்பையும் உயர்த்தி உள்ளீர்கள். தேச உணர்வோடு உங்களின் புதுமையான முயற்சிகள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வழி வகுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் நீண்ட ஆயுளுடன் எப்போதும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுடன் அவர் வாழ வேண்டும்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி: நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில், அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ தமிழ்நாட்டு மக்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். அவரது புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தவல்ல தலைமையின் கீழ் தேசம் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற அதன் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மக்களுக்கான ஏராளமான நலத்திட்டங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பிரதமர் உறுதியான கவனம் செலுத்துவது தமிழ்நாடு மீது அவர் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பைக் காட்டுகிறது. சிங்கப்பூரில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம், மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதி இருக்கை, ஆண்டுதோறும் காசி தமிழ்ச் சங்கமம், செளராஷ்டிர தமிழ்ச் சங்கமம், நாடாளுமன்றத்தில் புனித செங்கோலை நிறுவியது ஆகியவை தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரம் மீது பிரதமருக்கு இருக்கும் அளப்பரிய அன்பை வெளிப்படுத்துகின்றன. தேசத்துக்கு அவரது தொலைநோக்குத் தலைமை என்றும் தொடர நமது பிரார்த்தனைகள்.