டெல்லி: நாட்டின் 78வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. செங்கோட்டை கொத்தளத்தில் 11வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். செங்கோட்டையில் மழை சாரலுக்கு மத்தியில் பிரதமர் மோடி கொடியேற்றும் போது, ஹெலிகாப்டர்களில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.
சுதந்திர தினவிழா உரையை ஜெய் ஹிந்த் என தொடங்கிய பிரதமர் மோடி, விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து கூறினார். பின்னர், மத்திய அரசின் சார்பில் மக்களுக்கு செய்யப்பட்டுள்ள நலத்திட்டங்களை விக்சித் பாரத் என்ற பெயரில் பட்டியலிட்டார். மேலும், சுதந்திர தினத்தை கொண்டாட பாடுபட்ட விடுதலை வீரர்களை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகங்களை போற்றினார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களை தேசம் சந்தித்து வருகிறது. பலரும் தங்களின் உறவினர்கள், சொத்துகளை இழந்துள்ளனர். நமது தேசம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. கேரளாவின் வயநாடு சம்பவம் வருத்தம் அளிக்கிறது. அவர்களுக்கு தேசம் துணையாக நிற்கும் என்பதை உறுதி அளிக்கிறேன் என்றார்.