அயோத்தி: உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். மேலும், இந்த நிகழ்வில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும், சச்சின், மிதாலி ராஜ் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்களும் பங்கேற்றனர். இதற்காக அயோத்தி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதனையடுத்து, இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “இந்த விழாவில் குழந்தை ராமரின் சிலையை திறப்பது என்பது வெற்றி மட்டுமல்ல, பணிவும்தான். நமது நாடு வரலாற்று முடிச்சுகளை அவிழ்த்து அழகான எதிர்காலத்திற்குச் சென்றுள்ளது. ராமர் கோயில் கட்டுமானம் என்பது அமைதி, பொறுமை ஆகியவற்றைக் காட்டுகிறது. நாம் இந்த இடத்தில் எந்த நெருப்பையும் பார்க்கவில்லை. ஆனால் அங்கு ஒரு ஆற்றல் இருக்கிறது.
அயோத்தி கோயிலானது ராமர் வடிவில் ஒரு தேசிய உணர்வைக் கொண்டுள்ளது. இது சாதாரணமாக கடவுளின் கோயில் அல்ல. இது இந்தியாவின் தொலைநோக்கு, தத்துவம் மற்றும் வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது. கடந்த 11 நாட்களாக நான் பல்வேறு மொழிகளில் ராமாயணத்தைக் கேட்கும் வாய்ப்பை பெற்றேன். 2019, நவம்பர் 9 அன்று ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.