டெல்லி: குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டில் ஜனநாயகம் தலைக்க இந்துத்துவா கொள்கை தான் காரணம் என்றும் அது பற்றி விமர்சித்த ராகுல் காந்தியை இந்துக்கள் தலைமுறைகள் கடந்தாலும் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.
இந்து பயஙகரவாதம் என்ற சொல்லை கண்டுபிடித்ததே காங்கிரஸ் கட்சி தான் என்றும் சனாதன தர்மத்தை அவமதித்தது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக என்றார். இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது என்றும், இந்துக்களுக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இந்திய வங்கிகள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டதாகவும், ஆட்சியாளர்கள் மக்கள் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றதாகவும் கூறினார். ஜம்மு காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்தது அரசின் துணிச்சலான செயல் என்றும், சட்டப் பிரிவை ரத்து செய்த பின்னர் அங்கு ஒரு கல்வீச்சு சம்பவமும் இதுவரை பதிவாகவில்லை என்று கூறினார்.
பாஜக மீது மக்கள் கொண்டு இருந்த நம்பிக்கை காரணமாக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பளித்து உள்ளதாகவும். 2024 பொதுத் தேர்தல் மூலம் வருங்கால வளர்ச்சிமிகு இந்தியாவுக்கான காலம் தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் வெற்றி என்பது அனைத்து துறைகளிலும் காணப்படும் என்றும் இளைஞர், மகளிர் மற்றும் அனைத்து துறை மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அதன் மூலம் அவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியினர் மக்கள் ஆதரவை பெற்று வருவதாகவும் பூரி ஜெகநாதரின் ஆசிர்வாதத்தால் ஒடிசவில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதாகவும் குறிப்பிட்டார். ஆந்திரா சட்டப் பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அபார வெற்றி குறித்து குறிப்பிட்ட பிரதமர் மோடி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளதாகவும், கேரளாவில் இருந்து முதல் முறையாக பாஜகவுக்கு எம்பி கிடைத்துள்ளதாகவும் கூறினார். மேலும் கர்நாட்கவில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க:LIVE: மக்களவையில் பிரதமர் மோடி உரை! ராகுல் கேள்விகளுக்கு பதில்? - PM Modi Speech In Parliament