டெல்லி:பிரதமர் நரேந்திர மோடியும், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவும் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருதலைவர்கள் சந்திப்பைத் தொடர்ந்து, இருநாட்டு அதிகாரிகள் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்தியா - மாலத்தீவு சிறப்பு உறவுகளை முன்னெடுத்துச் செல்வது, ஹைதராபாத் மாளிகைக்கு வந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். இந்தியா - மாலத்தீவு இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற உள்ளன" என குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து நாட்கள் பயணமாக நேற்று, இந்தியா வந்த, மாலத்தீவு அதிபர் முய்ஸு, அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோருக்கு, இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர்.
இதையும் படிங்க:ம.பி. தொழிற்சாலையிலிருந்து ரூ.1800 கோடி மதிப்பில் போதைப் பொருள்கள் பறிமுதல்
மாலத்தீவு அதிபரும், அவரது மனைவியும் ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர், ராஜ்காட்டில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில் அதிபர் முய்ஸு கையெழுத்திட்டார். இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் அதிகாரப்பூர்வ அழைப்பின் பேரில் இந்தியா வந்த அதிபர் முய்ஸுவை, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் கிரிட்டி வர்தன் சிங் வரவேற்றார்.
இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு பேச்சுவார்த்தையின்போது, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும், அதிபர் முய்ஸுவும், இந்தியா - மாலத்தீவு இடையே நல்லுறவை வளர்ப்பது மற்றும் பராமரிப்பது குறித்து விரிவாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாக மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அரசின் ஆதரவுடன் நடைபெறும் பணிகளின் முன்னேற்றத்தை இரு நாடுகள் தரப்பிலும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. மாலத்தீவின் தற்போதைய வளர்ச்சி முன்னுரிமைகளுக்கு ஏற்ப இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளாகக் கருதும் கூடுதல் வழிகளை ஆராய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோர் டெல்லியில் வசிக்கும் மாலத்தீவு நாட்டினருடன் கலந்துரையாடலும் நடத்தினர்.
சீன ஆதரவாளராக உள்ள மாலத்தீவு அதிபர் முய்ஸுவின் இந்திய வருகை இருநாட்டு உறவை வலுப்படுத்த உதவும் என கூறப்படுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்