சித்ரதுர்கா (கர்நாடகா): கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "ஒரு காலத்தில் தலைவர்கள் என்றால் அறநெறியைக் கடைபிடுத்து வாழும் மேலானவர்களாக மக்கள் மத்தியில் காணப்பட்டார்கள்.
ஆனால், இன்று நமது நாட்டின் மிகப்பெரிய தலைவர், அறநெறியைக் காற்றில் பறக்கவிட்டு, மக்கள் முன் நல்லவர் போல் நாடகமாடிக் கொண்டு இருக்கிறார். மேலும், அவர் உண்மைப் பாதையில் நடக்கத் தவறிவிட்டார். நம் நாட்டை ஆளும் தலைவர்கள் என்றும் நமக்கு உண்மையாக இருப்பார்கள் என நாம் எதிர்பார்த்த காலம் ஒன்று இருந்தது.
ஆனால், இன்று நம் நாட்டின் மிகப்பெரிய தலைவராக இருப்பவரோ, தனது செல்வாக்கு, பெருமை மற்றும் புகழைக் காட்டவே வெளிநாடுகளுக்கு சென்று வருகிறார். மேலும், தலைவர்களிடம் சேவை மனப்பான்மை மற்றும் கருணை உள்ளத்தை மட்டுமே இதுவரை கண்ட மக்கள், தற்போது நாட்டின் மிகப்பெரிய தலைவராக இருப்பவரிம் அகந்தையை மட்டுமே காண்கின்றனர்.
உண்மை பாதையில் நடப்பதும், சேவை மனப்பான்மையுடம் தேசத்திற்காக உழைப்பதும், நமது ஹிந்து பாரம்பரியம் மற்றும் அரசியல் பாரம்பரியம் ஆகும். அந்த வகையில், முன்பு பிரதமராக இருந்த அனைவரும், கட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் பணியாற்றினர். ஆனால், இன்று எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவது, அவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவது மற்றும் முதலமைச்சர்களை சிறையில் அடைப்பது என எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றது.
நரேந்திர மோடியின் அரசில், இன்று பொய் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, உண்மைக்கு புறம்பான வழியில் அவர் வீழ்த்துகையில், ஊடகங்கள் அதனை 'மோடியின் அதிரடி தாக்குதல்' எனக் கூறுகின்றனர். இதிலிருந்தே, மாநில அரசுகளை வீழ்த்த, அனைத்து ஜனநாயக மாண்புகளையும் உடைக்கும் பாஜகவை கண்டிக்க எவரும் துணிவதில்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
தற்போது ரத்து செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மூலம் முன்பு பாஜக பல நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெற்றிருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆனால், ரூ.100 கோடி கூட சம்பாதிக்க முடியாத பல நிறுவனங்கள், பாஜகவுக்கு மட்டும் ஆயிரத்து 100 கோடி நன்கொடை அளித்தது எப்படி என்பது தான் இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. மேலும், தலா 100 கோடி விலை கொடுத்து, பிரதமர் மோடியால் மட்டுமே எதிக்கட்சி எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்க முடியும்.
ஆனால், பாஜகவின் இந்த செயலுக்கும், ஊழலுக்கு எதிராக எவரும் குரல் கொடுப்பதில்லை. அப்படி குரல் கொடுக்கும் எதிர்க்கட்சிகள் குறிவைக்கப்படுகின்றன. ஆனால், உண்மை இதுதான். பாஜகவினர் ஊழல்வாதிகள் மற்றும் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை தவறாக வழிநடத்தியுள்ளனர். அரசியல் சட்டத்தை மாற்றும் முயற்சி தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால், மக்கள் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில், இது உங்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.
கடந்த 45 ஆண்டுகளில், அதிக வேலையின்மை தற்போது தான் இருந்து வருகிறது. ஆனால், பாஜக தலைவர்கள் இதைப்பற்றி ஒருபோதும் பேசுவதில்லை. நம்மை திசை திருப்பும் வகையில் அனைத்தையும் செய்து வருகிறார்கள். உலகின் மிகப்பெரிய தலைவர் என மோடியை சிலர் கூறுகின்றனர். அப்படி என்றால், தனது பெருமை, புகழ், செல்வாக்கு இவற்றையெல்லாம் கொண்டு, அவர் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித்தர தவறியது ஏன்? விலைவாசி உயர்வை அவரால் குறைக்க முடியாதது ஏன்?
கடந்த 10 ஆண்டுகளில் அவரது நண்பர்கள் மட்டுமே பணக்காரர்களாக உயர்ந்துள்ளனர். நாட்டு மக்களின் நிலை, அப்படியே தான் உள்ளது. இந்தியா முன்னேற்றப் பாதையில் நகர்வதைக் கண்டு நீங்கள் பெருமைப்பட வேண்டும் என ஒவ்வொரு நாளும் உங்களுக்கு சொல்லப்படுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் என்ன பெற்றீர்கள் என்று நான் கேட்க விரும்புகிறேன். எனவே, மாற்றம் வர வேண்டும் என்றால் அதற்கு மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். 'நியாய பத்ரா' செயல்பாட்டால் மிகப்பெரிய மாற்றம் நிகழும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:மோடியின் சர்ச்சை பேச்சு: மத மோதல்களை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி மீது சென்னையில் புகார்..! - Complaint Against PM Modi