புதுடெல்லி: புகழ் பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் தனது 73 வயதில் நேற்றைய தினம் காலமானார். நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் 1951 ஆம் ஆண்டு மார்ச் 9 இல் பிறந்த ஜாகிர் உசேன், இந்திய பாரம்பரியமிக்க தபேலாவை தனது அற்புதமான வாசிப்பின் மூலம் உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர். ஜாகிர் ஹுசைனின் பங்களிப்பு சர்வதேச இசை அரங்கில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. இவரது மறைவுக்கு இசையுலக பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் இரங்கல்
அந்த வகையில் பிரதமர் மோடி, '' தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன் மறைவு வருத்தமளிக்கிறது. இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய உண்மையான மேதையாக அவர் என்றும் நினைவுகூரப்படுவார். அவர் தனது இணையற்ற தாளத்தால் உலக அரங்கிற்கு தபேலாவை கொண்டு சென்று மில்லியன் கணக்கானவர்களை கவர்ந்துள்ளார். இந்திய பாரம்பரிய மரபுகளை உலகளாவிய இசையுடன் கலக்கியிருக்கிறார். அது கலை பண்பாட்டு ஒற்றுமையின் சின்னமாக விளங்கும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும், இசையமைப்பாளர்களுக்கும், இசை ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.