தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அப்பாவி ஆண்களுக்கு எதிராக ஆயுதமாக்கப்படும் டவுரி சட்டம்..? 'நேரம் வந்தாச்சு'.. சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பான மனு! - DOWRY LAW REVIEW

கணவர் மற்றும் அவரது வீட்டார் சட்டவிரோதமாக பழிவாங்கப்படுவதை தவிர்க்க, வரதட்சணை தடுப்பு மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து சீர்திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம், அதுல் சுபாஷுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள்
உச்ச நீதிமன்றம், அதுல் சுபாஷுக்கு அஞ்சலி செலுத்தும் மக்கள் (credit - ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 3:48 PM IST

புது டெல்லி: குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் கணவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஐடி ஊழியர் அதுல் சுபாஷ் (34) என்பவர் மனைவி மற்றும் அவரது குடும்பத்தாரால் அனுபவித்து வந்த கொடுமை தாங்க முடியவில்லை என குற்றஞ்சாட்டி, தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து பெங்களூரு போலீசார் சுபாஷின் மனைவி மற்றும் மாமியார் வீட்டார் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி வரதட்சணை தடுப்பு மற்றும் குடும்ப வன்முறைச் சட்டங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் விஷால் திவாரி மனு தாக்கல் செய்துள்ளார்.

பொய் குற்றசாட்டு

அந்த மனுவில், ''பெங்களூருவில் 34 வயதான அதுல் சுபாஷ் என்ற ஐடி ஊழியரின் தற்கொலை, வரதட்சணை தடைச் சட்டங்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் ஆண்களின் மனநலம் குறித்து நாடளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. சுபாஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன், 80 நிமிட வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், சுபாஷ் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மனைவி தரப்பு பொய் வழக்குகளை பதிவு செய்து, மிரட்டி பணம் பறிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தவறான ஆயுதம்

மேலும், அதுல் சுபாஷ் தனது 24 பக்க தற்கொலைக் கடிதத்தில் நீதித்துறையையும் விமர்சித்துள்ளார். வரதட்சணை தடைச் சட்டம் மற்றும் ஐபிசியின் பிரிவு 498A ஆகியவை திருமணமான பெண்களை வரதட்சணை கொடுமை மற்றும் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கிறது. ஆனால், அதே சமயம் இந்த சட்டங்கள் கணவரின் குடும்பத்திலிருந்து சட்ட விரோதமாக தேவையற்ற டிமாண்டுகளை கேட்டு பெறக்கூடிய ஆயுதமாக மாறியுள்ளன.

நிபுணர் குழு

தற்போதுள்ள வரதட்சணைச் சட்டங்கள் மற்றும் குடும்ப வன்முறைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து, சீர்திருத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதனால், அந்த சட்டங்களை தவறாக பயன்படுத்துவதை தடுத்தி நிறுத்தி அப்பாவி ஆண்களை காப்பாற்றலாம். அத்துடன், வரதட்சணை சட்டத்தின் உண்மையான நோக்கத்திற்கு களங்கமும் ஏற்படாது. எனவே, தற்போதுள்ள வரதட்சணை தடை மற்றும் குடும்ப வன்முறைச் சட்டங்களை மறு ஆய்வு செய்யவும், சீர்திருத்தம் செய்யவும், அவற்றை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில், ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும்'' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த 10 ஆம் தேதி பெண் ஒருவரால் கணவர் வீட்டார் மீது பதியப்பட்டிருந்த வரதட்சணை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்குகளை நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

அப்போது காட்டமாக சில கருத்துக்களை தெரிவித்த நீதிபதிகள், '' வரதட்சணைத் தடைச் சட்டம், ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் இழைக்கப்படும் கொடுமையைக் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், கடந்த ஆண்டுகளில், நாடு முழுவதும் வரதட்சணை மற்றும் குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளன. அதே சமயம், கணவன் மற்றும் அவரது குடும்பத்தினரை பழிவாங்க இந்த சட்டத்தை தவறாகப் பயன்படுத்தும் போக்கும் அதிகரித்து வருகிறது'' என அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details