புதுடெல்லி:டெல்லியைச் சேர்ந்த தன்னார்வ அமைப்பான 'குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு எதிரான இயக்கம்' சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், 'எங்கள் அமைப்பால் சேகரிக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புள்ளிவிவரங்களின்படி, 70 சதவீதத்திற்கும் அதிகமான சாலை விபத்துக்களுக்கு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதே காரணம் என்றும், இதன் விளைவாக நாடு முழுவதும் ஆண்டுக்கு 1,00,000 க்கும் அதிகமான சாலை மரணங்கள் நிகழ்கின்றன என்றும் தெரிய வந்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'மது அருந்துவது ஒருவரின் அடிப்படை உரிமையாக கருத முடியாது' என்றும் இம்மனுவில் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஒரு தனிநபரை மது அருந்த அனுமதிப்பதற்கான சட்டப்பூர்வ் வயதுவரம்பு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறாக உள்ளது. அதாவது தமிழ்நாடு, கர்நாடகா, கோவா போன்ற மாநிலங்களில் மதுஅருந்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகவும், இதுவே டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இந்த வயது வரம்பு 25 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ' 18 -25 வயதுக்குட்ட இளைஞர்களில் சுமார் 42.3 சதவீதத்தினர், தாங்கள் 18 வயதை அடையும் முன்பே முதல்முறை மதுவின் வாசத்தை நுகர்ந்தவர்களாக உள்ளனர் எனவும், இவர்களில் 90 சதவீதம் பேரால், எவ்வித வயது சரிபார்ப்பு நடைமுறையும் இன்றி, மது விற்பனை கூடங்களில் மதுபானங்களை எளிதாக பெற முடிகிறது' எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.