ஹைதராபாத்:நாடு முழுவதும் நான்காம் கட்ட மக்களவை தேர்தல் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், மத்தியப் பிரதேசம், மேற்குவங்கத்தில் தலா 8 தொகுதிகள், பீகாரில் 5, ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இதனுடன் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், ஒடிசாவில் உள்ள 28 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 1717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றன. இதில் அகிலேஷ் யாதவ், அசாருதீன் ஒவைசி, ஒய்.எஸ்.சர்மிளா உள்ளிட்ட பல நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
அகிலேஷ் யாதவ் (கன்னோஜ் உ.பி):உத்தரப் பிரதேசம் மாநிலம் கன்னோஜ் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். பல ஆண்டுகளாக அக்கட்சியின் கோட்டையாக இருந்த இந்த தொகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடளுமன்ற தேர்தலில் அகிலேஷ் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.
இதனையடுத்து 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கன்னோஜ் தொகுதியின் வேட்பாளராக அகிலேஷின் உறவினர் தேஜ் பிரதாப் சிங் யாதவ் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை திரும்பப்பெற்று தற்போது அகிலேஷ் யாதவ் நேரடியாக இத்தொகுதியில் களம் காண்கிறார். இதனால் இந்த தொகுதி முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது
அசாதுதீன் ஒவைசி:மஜ்லிஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் ஹைதராபாத் நாடாளுமன்றத் தொகுதியில், 1984 ஆம் ஆண்டு முதல் 2004ஆம் வரை சுல்தான் சலாவுதீன் எம்பியாக இருந்தார். அவரை தொடர்ந்து 2004 ஆம் முதல் சுல்தான் சலாவுதீன் மகனும், ஏஐஎம்ஐஎம்(AIMIM) கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி எம்பியாக இருந்து வருகிறார்.