ஸ்ரீநகர் :காஷ்மீரில் உள்ள மூன்று மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி அறிவித்து உள்ளார். அனந்த்நாக் தொகுதியில் மெகபூபா முப்தி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மக்கள் ஜனநாயக கட்சியின் இளைஞர் பாசறை தலைவர் வகீத் பர்ரா ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிட உள்ளார்.
முன்னாள் காஷ்மீர் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சியுடனான கருத்து மோதலை தொடர்ந்து மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளதாக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) நாடாளுமன்ற குழு தலைவர் சர்தஜ் மத்னி மற்றும் மெகபூபா முப்தி ஆகியோர் பத்திரிகையாளர் சந்திப்பில் ஈடுபட்டனர். இதில் காஷ்மீரில் மொத்தம் உள்ள 3 தொகுதிகளுக்கும் பிடிபி கட்சி வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
இதில் அனந்த்நாக் தொகுதியில் முன்னாள் முதலமைச்சரும் பிடிபி கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் ஸ்ரீநகர் தொகுதியில் கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர் வகீத் பர்ரா போட்டியிட உள்ளார். பாரமுல்லா தொகுதியில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மிர் பயாஸ் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், ஜம்முவில் உள்ள உதம்பூர் மற்றும் ஜம்மு தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு பிடிபி ஆதரவு தெரிவிப்பதாக இருவரும் கூறினர். இதில் அனந்த்நாக் தொகுதியில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியின் குலாம் நபி ஆசாத் மற்றும் தேசிய மாநாட்டு கட்சியின் மியான் அல்தாப் ஆகியோரை எதிர்த்து பிடிபி கட்சித் தலைவர் மெகபூபா முப்தி களம் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், ஜம்முவில் உள்ள மூன்று தொகுதிகளுக்கும் பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா கூட்டணியில் உள்ள பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி மற்றும் மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி தனித் தனியா ஜம்முவில் களம் காணுவது அந்த கூட்டணியில் மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :யூடியூபில் சப்ஸ்கிரைபர்ஸ் அதிகரிக்க நூதன திட்டம் - வினாத் தாள்களை கசிய விட்ட ஆசிரியர் கைது! - Odisha Question Paper Leak