டெல்லி :பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக பேடிஎம் நிறுவனத்தை பிப்ரவரி 29ஆம் தேதிக்கு பின்னர் தொடர்ந்து இயங்க இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தடை விதித்தது. இந்நிலையில், வாடிக்கையாளர்கள் டெபாசிட் தொகையினை மாற்றுவது, ப்ரீபெய்டு, வேலட், பாஸ்டேக் உள்ளிட்ட காரணங்களுக்காக மார்ச் 15ஆம் தேதி வரை பேடிஎம்க்கு ஆர்பிஐ கால அவகாசம் வழங்கியது.
இந்நிலையில், பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் சர்மா அறிவித்து உள்ளார். பேடிஎம் பேமண்ட்ஸ் நிறுவனத்தின் பகுதிநேர நான் எக்ஸிக்யூடிவ் சேர்மனாக விஜய் சேகர் சர்மா பதவி வகித்து வந்த நிலையில் தற்போது ராஜினாமா அறிவித்து உள்ளார்.
இதையடுத்து பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கியை மீண்டும் கட்டமைக்கும் நோக்கில் புதிய இயக்குநர்கள் குழு நியமிக்கப்பட்டு உள்ளது. முன்னாள் மத்திய வங்கி தலைவர் ஸ்ரீநிவாசன் ஸ்ரீதர், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேபேந்திரநாத் சாரங்கி, பேங்க் ஆப் பரோடா முன்னாள் நிர்வாக இயக்குநர் அசோக் குமார் மற்றொரு ஒய்வு பெற்ற ஐஏஎஸதிகாரி ரஜினி சேகரி சிபல் ஆகியோர் பேடிஎம் பேமண்ட்ஸ் இயக்குநர்கள் குழுவில் இணைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.