புதுடெல்லி: மாநிலங்களவை காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி இருக்கையில் இருந்து பணநோட்டு கட்டுகள் கைப்பற்றப்பட்டதாக மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்ததையடுத்து அவையில் அதுகுறித்து கூச்சம் குழப்பம் நேரிட்டது.
நாடாமன்றத்தின் இரு அவைகளும் 9ஆவது நாளாக இன்று வழக்கம்போல் கூடின. மக்களவை தலைவர் ஓம்பிர்லா மக்களவைக்குள் வந்ததும், இருக்கையில் இருந்து எழுந்த காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், பாஜகவின் நிஷிகாந்த் துபே கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம்பிர்லா,"அவையின் கண்ணியத்தை பாதுகாப்பதில் சமரசம் இல்லை, கேள்வி நேரம் தொடங்குவதில் உங்களுக்கு விருப்பம் இல்லையா?"என்று கேட்டார். எனினும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருக்கைகளில் அமராமல் கோஷமிட்டபடி இருந்தனர். மேலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு முக கவசம் அணிந்து வந்திருந்தனர். அதில் மோடி, அதானி நண்பர்கள் என்பதை குறிக்கும் இந்தி வார்த்தைகள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து அவை தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள் ஒரு மணி நேரம் வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவையில் கைப்பற்றப்பட்ட பணம்:மாநிலங்களவை கூடியதும் பேசிய அவை தலைவர் ஜகதீப் தன்கர்,"மாநிலங்களவை நேற்று ஒத்தி வைக்கப்பட்டதும், நாசவேலையில் ஈடுபடும் வகையில் பொருட்கள் அவைக்குள் இருக்கிறதா என்பது குறித்து வழக்கமாக சோதனை செய்தபோது, 500 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த ரூபாய் நோட்டுகள் இருக்கை எண் 222ல் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இந்த இருக்கை தெலங்கானாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் எம்பி அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் என் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது,"என்றார்.
இதன் பின்னர் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே,"இந்த விஷயம் குறித்து விசாரணை செய்யப்படலாம். ஆனால், இது குறித்து விவாதிக்க தேவையில்லை,"என்று கூறினார்.அவரது பேச்சுக்கு ஆளும் பாஜக கூட்டணியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர்,"எதிர்கட்சித் தலைவர் இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தத் தேவையில்லை என்கிறார். என்னுடைய சந்தேகம்,அந்த காங்கிரஸ் உறுப்பினர் அவைக்கு வந்தாரா இல்லையா என்பதுதான். மாநிலங்களவையில் பராமரிக்கப்படும் டிஜிட்டல் ஆவணங்களின் படி அவர் கையெழுத்திடுவதற்காக அவைக்கு வந்திருக்கிறார்,"என்று குறிப்பிட்டார்.