தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அரசு மீது வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் அவதூறு பரப்பப்படுவதாக பாஜக புகார்... எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஒத்தி வைப்பு! - PARLIAMENT

மத்திய அரசு மீது வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் அவதூறு பரப்பப்படுவதாக பாஜக எம்பி சுதன்ஷு திரிவேதி மாநிலங்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

பாஜக எம்பி சுதன்ஷு திரிவேதி
பாஜக எம்பி சுதன்ஷு திரிவேதி (Image credits-Sansad TV)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2024, 1:26 PM IST

புதுடெல்லி: மத்திய அரசு மீது வெளிநாட்டு நிதி உதவியின் கீழ் அவதூறு பரப்பப்படுவதாக பாஜக எம்பி சுதன்ஷு திரிவேதி மாநிலங்களவையில் குற்றம் சாட்டினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எட்டாவது நாளாக இன்று வழக்கம்போல கூடியது. மாநிலங்களவையில் இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடிய உறுப்பினர்கள் வாழ்த்துகள் கூறப்பட்டது. தொடர்ந்து மாநிலங்களவை குழுக்களின் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் பின்னர், தமிழகத்தின் மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக எம்பி திருச்சி சிவா, அதிமுக எம்பி தம்பித்துரை ஆகியோர் நோட்டீஸ் அளித்திருப்பதாக மாநிலங்களவைத் தலைவர் தன்கர் அறிவித்தார். இதனை ஜீரோ ஹவரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக கூறினார். தொடர்ந்து ஜீரோ ஹவர் தொடங்குவதாக அறிவித்த மாநிலங்களவைத் தலைவர், முதலில் பாஜக எம்பி சுதன்ஷு திரிவேதி கொடுத்திருந்த விவகாரம் குறித்து விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளவதாக கூறி அவரை பேச அழைத்தார்.

இதையடுத்து பேசிய சுதன்ஷூ திரிவேதி, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு வெளிநாட்டு நிதி உதவியுடன் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதாகவும், நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் தொடங்கும் முன்பு அவையை முடக்கும் வகையில் வெளிநாட்டு நிதி உதவியுடன் பெகாசஸ் உளவு விவகாரம், ஹிண்டர்பர்க் அறிக்கை உள்ளிட்டவை வெளியிடப்பட்டதாகவும் பேசினார்.

அவரது பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவைத் தலைவர் தன்கர், எதிர்கட்சிகளும் இந்த விவாதத்தில் பங்கேற்கலாம். அமைதியாக இருங்கள். அவர் பேசி முடித்ததும் வாய்ப்பு தருகின்றேன் என்றார். ஆனால், எதிர்கட்சியினர் ஏற்க மறுத்து விட்டனர். இதையடுத்து மாநிலங்களவை தலைவர் தன்கர்,மேற்குவங்கத்தை சேர்ந்த எம்பி டெரெக் ஓ பிரையனை பேச அழைத்தார். அவர் இருக்கையில் எழுந்து பேச முயற்சித்தபோது பேசுவதற்கான மைக் ஆன் ஆகவில்லை. மேலும் கூச்சல் குழப்பமும் ஓயவில்லை. எனவே மாநிலங்களவை தொடங்கிய 16 நிமிடத்துக்குள் நண்பகல் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மக்களவையில் சம்பல் விவகாரம் எதிரொலிப்பு: மக்களவையில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க உ.பி சம்பல் பகுதிக்கு செல்ல முயன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால் ஒத்தி வைப்பு தீர்மானம் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று மக்களவையில் முதல் ஒரு மணி நேரம் கேள்வி நேரம் சுமுகமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சம்பல் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மேலும், அதானி மீதான அமெரிக்கா வழக்கு குறித்து நாடாளுமன் கூட்டு குழு அமைக்க வேண்டும் என்றும் எதிர்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால், அவர்களின் கோரிக்கையை மக்களவை தலைவர் ஓம்பிர்லா ஏற்கவில்லை. எனினும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் மதிய உணவு இடைவேளை வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details