தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசியலமைப்பு சட்டம் குறித்து மக்களவையில் விவாதம்....பாஜக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் பேச்சு! - PARLIAMENT WINTER SESSION DAY 14

அரசியலமைப்பு சட்டம் குறித்து மக்களவையில் விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு, "அரசியமைப்பு சட்டத்தின் முகவுரையில் உள்ள சோஷலிசம், மதசார்பின்மை ஆகியவை வெற்று வார்த்தைகள் அல்ல. அவை மிக முக்கியமான மதிப்பீடுகளாகும்,"என்றார்.

மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு (கோப்புக் காட்சி)
மக்களவையில் திமுக எம்பி டி.ஆர்.பாலு (கோப்புக் காட்சி) (Image credits-Sansad TV)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 5:42 PM IST

புதுடெல்லி:அரசியலமைப்பு சட்டம் குறித்து மக்களவையில் விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு,"அரசியமைப்பு சட்டத்தின் முகவுரையில் உள்ள சோஷலிசம், மதசார்பின்மை ஆகியவை வெற்று வார்த்தைகள் அல்ல. அவை மிக முக்கியமான மதிப்பீடுகளாகும்,"என்றார்.

அரசியலமைப்பு சட்டம் ஏற்கப்பட்டு 75 ஆண்டு ஆனதை முன்னிட்டு அது குறித்த இரண்டு நாள் விவாதம் மக்களவையில் இன்று தொடங்கியது. விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்க பல தலைவர்கள் பங்களித்திருக்கின்றனர். ஆனால், இது காங்கிரஸ் கட்சியால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.

காங்கிரஸ் மதிப்பு அளிக்கவில்லை: பல சமயங்களில் அரசியலமைப்பு சட்டத்துக்கும் அதன் ஆன்மாவுக்கும் காங்கிரஸ் மதிப்பு அளிக்கவில்லை. அமைப்புகளின் சுதந்திர தன்மையை காங்கிரஸ் எப்போதுமே சகித்துக் கொள்ளவில்லை. எப்போதுமே அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை காங்கிரஸ் அழிக்க முயற்சி செய்திருக்கிறது. ஆனால், பாஜக எப்போதுமே அரசியலமைப்பு சட்டத்தின் முன்பு பணிவுடன் இருக்கிறது. அமைப்புகளின் தனித்தன்மை, சுதந்திர தன்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. நமது அரசியலமைப்பு சட்டமானது சமூக, பொருளாதார, அரசியல், கலாச்சார வாழ்க்கையின் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. தேசத்தை கட்டமைக்கும் வழியையும் அது வெளிப்படுத்துகிறது. உலக அரங்கில் இந்தியாவை அதன் இடத்தில் வைப்பதற்கான வழிகாட்டியாகும். வரலாற்று நிகழ்வுகளின் தொடர்ச்சியான வெளிப்பாடாகும்.

இதையும் படிங்க:இட ஒதுக்கீட்டை பலவீனப்படுத்த முயற்சி...பாஜகவை சாடிய பிரியங்கா காந்தியின் கன்னிப்பேச்சு!

அரசியலமைப்பு அவையில் இடம் பெறாதவர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் அரசியலமைப்பு அவையில் இடம் பெற விட்டாலும் கூட அவர்களின் ஆலோசனைகள் அரசியலமைப்பின் பகுதியாக இருந்தன. அவை முக்கியமான பங்கு வகித்தன. பண்டிட் மதன் மோகன் மாளவியா, லாலா லஜபதி ராய், பகத் சிங், வீர் சவார்கர் மற்றும் அரசியலைப்பு சட்டத்தை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய இதர தலைவர்களையும் நாம் அவசியம் நினைவு கூற வேண்டும்,"என்றார்.

வழிகாட்டி விளக்கு: விவாதத்தில் பேசிய சமாஜ்வாதி கட்சி தலைவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், " அரசியலமைப்பு சட்டமானது ஜனநாயகத்தின் உயிர்மூச்சாகும். ஒடுக்கப்பட்டோர், ஏழைகளின் பாதுகாவலராகவும் திகழ்கிறது. சம உரிமை, ஒற்றுமை, நீதி அடிப்படையிலான முறையை உருவாக்கியவர் அம்பேத்கர். சமூகத்தின் ஏற்ற தாழ்வுகளை குறைக்க நேர்மையான கொள்கைகளை உருவாக்க சாதி ரீதியான கணக்கெடுப்பு அவசியம்," என்றார்.

அரசியலமைப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்பி டி.ஆர்.பாலு, " அரசியமைப்பு சட்டத்தின் முகவுரையில் உள்ள சோஷலிசம், மதசார்பின்மை ஆகியவை வெற்று வார்த்தைகள் அல்ல. அவை மிக முக்கியமான மதிப்பீடுகளாகும். இந்தியாவின் ஜனநாயக மற்றும் நியாயமான பார்வையை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.சுதந்திர இந்தியாவின் தலைவர்களிடம் இருந்து கிடைத்த வழிகாட்டி விளக்கு. பாகுபாடு, கும்பல் வன்முறை இவையெல்லாம் அரசியலமைப்பு சட்டத்தின் மதிப்பீடுகளான சம உரிமை, நீதி ஆகியவற்றுக்கு எதிரானவையாகும். அரசியலமைப்பு சட்டத்தின் கொள்கைகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் பேசி வருகின்றனர். இந்த விவாதத்துக்கு பதில் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாளை உரையாற்றுவார்.


ABOUT THE AUTHOR

...view details