புதுடெல்லி:நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்களை தாக்கியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது புகார் பதிவு செய்யப்பட்ட நிலையில் காயம் அடைந்த இரண்டு பாஜக எம்பிக்களிடம் போலீசார் வாக்குமூலங்களை பதிவு செய்ய உள்ளனர். விசாரணைக்கு வருமாறு ராகுலுக்கு அழப்பு விடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்து பேசிய போலீசார், "நாடாளுமன்ற வளாகத்தில் தள்ளுமுள்ளு நடந்ததாக கூறப்படும் இடங்களில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை தருமாறு நாடாளுமன்ற செயலகத்துக்கும் கடிதம் அனுப்பப்பட உள்ளது. மேலும் இந்த விசாரணையை உள்ளூர் போலீசாரிடம் இருந்து குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றவும் மூத்த அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
பாரதிய நியாயா சன்ஹிதா சட்டத்தின் பிரிவுகள் 115(தாமாக முன் வந்து காயம் ஏற்படுத்துதல்), பிரிவு 117(தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), பிரிவு 125(பிறருடைய தனிப்பட்ட பாதுகாப்புக்கு அல்லது உயிருக்கு ஊறு விளைவிக்கும் செயலில் ஈடுபடுதல்), பிரிவு 131 (குற்ற நடவடிக்கை மேற்கொள்ளல்) , பிரிவு 351 (குற்றம் இழைக்கும் நோக்கம்) மற்றும் பிரிவு 3(5) (பொதுவான நோக்கம்) ஆகியவற்றின் கீழ் வியாழக்கிழமையன்று நாடாளுமன்ற தெரு காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.