டெல்லி: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை எனக் கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், தற்போது கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, இமாச்சல பிரதேசம் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (ஜூலை 23) 2024 - 2025 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் குறிப்பிட்டு சொல்லும் படியாக தமிழ்நாட்டுக்கு எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, மற்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த நிலையில் ஆந்திரா, பீகாருக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலுக்கான நிதி, மதுரை கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி உள்ளிட்ட எதிர்பார்ப்புகளை குறிப்பிட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்து இருந்த நிலையில் அவரது எந்த கோரிக்கையையும் மத்திய அரசு பட்ஜெட்டில் செயல்படுத்தப்படவில்லை.