டெல்லி:டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில், "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒழிக்க வேண்டும், ஏனெனில் மனிதர்கள் அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் அவைகளை ஹேக் செய்யப்படுவதற்கான ஆபத்து உள்ளது என்று பதிவிட்டு இருந்தார்.
எலான் மஸ்க்கின் இந்த திடீர் கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எலான் மஸ்கின் பதிவை மேற்கொள்காட்டி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆராய்வதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை, தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று புகார்கள் எழுந்துள்ளன.
தேர்தல் நடத்தும் அமைப்புகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும் போது ஜனநாயகம் சீர்குலைந்துவிடும் என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து ராகுல் காந்தி மற்றும் எலான் மஸ்கின் பதிவை மேற்கொள்காட்டி முன்னாள் மத்திய தொழில்நுட்ப இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிவு வெளியிட்டார்.
அதில், பாதுகாப்பான டிஜிட்டல் வன்பொருளை யாராலும் உருவாக்க முடியாது என்பதைக் குறிக்கும் மிகப் பெரிய பொதுமைப்படுத்தும் அறிக்கை இது, முற்றிலும் தவறான கருத்து. இவிஎம் இயந்திரங்களில் இணைய இணைப்பு இல்லை, புளூடூத் இல்லை, வைபை மற்றும் இன்டர்நெட் என எந்த வித தொழில்நுப்ட வசதிகளும் இல்லை.
மேலும் இவிஎம் இயந்திரங்களில் மறு புரோகிராம் செய்ய முடியாத வகையில் புரோகிராம் செய்யப்பட்டு ஹேக் செய்வதற்கான வழியே இல்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்தியா செய்தது போல் கட்டமைத்து உருவாக்க முடியும். ஒரு பயிற்சியை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம் என்று பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் ராஜீவ் சந்திரசேகரின் பதிவை மேற்கொள்காட்டி, "எதையும் ஹேக் செய்யலாம்" என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவில் இவிஎம் இயந்திரங்கள் ஒரு கருப்பு பெட்டி போன்று யாரையும் ஆராய அனுமதிப்பதில்லை என்றார்.
மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் பதிவை மேற்கொள்காட்டி, இளைஞர் காங்கிரஸ் பிரிவின் தேசியத் தலைவர் பிவி ஸ்ரீநிவாஸ் தனது பக்கத்தில், பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகரின் கருத்துப்படி, எதுவும் சாத்தியம் என்றால், எதையும் ஹேக் செய்யலாம். அப்படியானால், இந்திய இவிஎம் இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது?, அவை கடவுளால் பாதுகாக்கப்படுகிறதா? அல்லது கடவுளின் மறு அவதாரமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவ்வாறு, இவிஎம் இயந்திரங்கள் குறித்து சமூக வலைதளத்தில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:ஆர்டிஐ எனும் சாமானியனின் வஜ்ராயுதம் - சாதித்தது என்ன? - Right To Information Act