புவனேஷ்வர்: 18வது மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அங்கு ஏறத்தாழ 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை பின்னுக்குத் தள்ளி பாஜக ஆட்சி அமைத்தது. மொத்தம் 147 தொகுதிகளை கொண்ட ஒடிசா சட்டப்பேரவையில் பாஜக 74 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
ஒடிசாவில் முதலமைச்சரை தேர்வு செய்வதில் பாஜக இடையே கடும் இழுபறி நீடித்து வந்த நிலையில் ஒரு வழியாக 4 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன் சரண் மாஜி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மோகன் சரண் மாஜி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதமர் மோடி முன்னிலையில் அவருக்கு ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சர்கள் பிரிவாதி பரிதா மற்றும் கே.வி சிங் ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று, முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட மோகன் சரண் மாஜிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜேபி நட்டா, தர்மேந்திர பிரதான், நிதின் கட்காரி, ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் சர்மா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும் ஒடிசா முன்னாள் முதலமைச்சரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
மாநிலத்தின் பழங்குடியின மக்களின் முகமாக அறியப்படும் மோகன் சரண் மாஜி கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் நான்கு முறை கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மோகன் சரண் மாஜி. பஞ்சாயத்து தலைவராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய மோகன் சரண் மாஜி, பிஜூ ஜனதா தளம் ஆட்சியில் பாஜகவின் சட்டமன்ற கொறடாவாகவும் பணியாற்றி உள்ளார்.
அதேபோல் துணை முதலமைச்சராக கே.வி. சிங் தியோ ஆறு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில அரசியலில் நல்ல புரிதலும், பல்வேறு பொறுப்புகளை வகித்த அனுபவமும் கேவி சிங்கிற்கு உண்டு. மேலும், மற்றொரு துணை முதலமைச்சர் பிரிவாதி பரிதா முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முறையிலேயே அவர் துணை முதலமைச்சராக பதவியேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ஆந்திர முதலமைச்சராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு! - chandrababu naidu oath taking