புதுதில்லி:கடந்த மே மாதம், அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட 2024 -25 ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலை நுழைவுத் தேர்வின் வினாத்தாள் கசிந்ததாகவும், முறைகேடுகள் நடைபெற்றதாகவும் கூறி, போட்டியாளர்கள் பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இத்தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் தங்களது மனுவில் கோரியிருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இவ்வழக்குகளை ஒன்றாக விசாரித்து வந்தது. மனுதாரர்கள், என்டிஏ, சிபிஐ என அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த வழக்கில், கடந்த மாதம் 23 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் 'இந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் இளநிலை நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், அவ்வாறு ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வது நியாயமாக இருக்காது' என்றும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், 2024 நீட் தேர்வை ரத்து செய்ய கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களை விளக்கி, விரிவான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அளித்துள்ளது. அதில், 'இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் பாட்னா, ஹசாரிபாக் ஆகிய இடங்களை தவிர, வேறெங்கு தேர்வு முறைகேடுகள் நடைபெறவில்லை. குறிப்பிட்ட இடங்களில் நடைபெற்ற முறைகேட்டை கொண்டு, ஒட்டுமொத்த தேர்வின் உரிய நோக்கமும் சிதைந்துவிட்டதாக கருத முடியாது" என்று தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.