டெல்லி:நீட் தேர்வு முடிவுகள் அந்தெந்த தேர்வு மையங்கள் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. இன்று (ஜூலை.20) நண்பகல் 12 மணி அளவில் தேர்வு முடிவுகளை வெளியிடக் கோரி தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்த நிலையில், தேர்வு மையங்கள் வாரியாக மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நீட் முறைகேடு தொடர்பாக அந்த தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும், நீட் தேர்வு முடிவுகளை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு மையங்கள் வாரியாக வெளியிட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வின் மதிப்பெண் வாரியான முடிவுகளை நகரங்கள் மற்றும் மையங்கள் வாரியாக தேசிய தேர்வு முகமை இன்று வெளியிட்டுள்ளது. ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறார்களா என்பதை ஆராயும் வகையில் நகர மற்றும் தேர்வு மையங்கள் வாரியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அவ்வாறு, ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்களில் அதிகம் பேர், அதிக மதிப்பெண் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது தொடர்பாக விசாரணையை கொண்டு செல்ல உச்ச நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது. இதனிடையே நீட் தேர்வு முறைகேடு தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 22ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.