கோட்புட்ல்(ராஜஸ்தான்): ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்ல் நகருக்கு அருகே உள்ள கிராத்பூர் கிராமத்தில் 700 அடி போர்வெல் குழிக்குள் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
போர்வெல் குழிக்குள் விழுந்த சிறுமியை பாதுகாப்பாக மீட்க உள்ளூர் நிர்வாகம், தேசிய, மாநில பேரிடர் மேலாண்மை படைகள் உள்ளிட்ட அமைப்புகளின் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணி குறித்து பேசிய சப்டிவிஷன் மாஜிஸ்திரேட் பரஜேஸ் சவுத்ரி, "மீட்கும் பணியில் முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் போர்வெல் குழியில் இருந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய பேரிடர் மேலாண்மை படை, மாநில பேரிடர் மேலாண்மை படை, உள்ளூர் நிர்வாகம் ஆகியவை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குழியில் விழுந்த சிறுமிக்கு கீழ் பகுதியில் ஒரு வளையம் ஒன்றை வைத்திருக்கின்றோம். எனவே விரைவில் அந்த சிறுமியை மீட்டு விடுவோம். சிறுமி இப்போது வரை நல்ல உடல் நலத்தோடு இருக்கிறார்," என்றார்.
சிறுமி எவ்வாறு எப்போது விழுந்தார்?: போர்வெல் குழி அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நேற்று மதியம் 1.30 மணியைப் போல போர்வெல் குழியில் விழுந்திருக்கிறார். தொடக்கத்தில் 15 அடி ஆழத்தில் இருந்த சிறுமி, பினனர் நேரம் செல்ல, செல்ல 150 அடி ஆழத்துக்குச் சென்று விட்டார். சிறுமியின் அழுகுரல் கேட்டே அந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு சிறுமி போர்வெல் குழியில் விழுந்தது தெரியவந்துள்ளது. சிறுமி போர்வெல் குழியில் விழுந்த தகவல் தெரிந்ததில் இருந்து, மீட்பு படையினர் இரவிலும், பகலிலுமாக தொடர்ந்து தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணியில் தடங்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக போர்வெல் குழியை சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
மீட்பதில் உளள சவால்கள்: செய்தியாளர்களிடம் பேசிய மாநில பேரிடர் மேலாண்மை படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் ரவிகுமார், "போர்வெல் குழியை சுற்றி உள்ள மண் பகுதி வலுவாக இல்லை. எனவே போர்வெல் குழிக்கு அருகே சுரங்கம் அமைத்து சிறுமியை மீட்பது சிக்கலாக உள்ளது. வேறு வழிகளில் மீட்பு முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம். எவ்வளவு நேரம் ஆகும் என்பது கணிக்கமுடியாததாக உள்ளது. சிறுமி இருக்கும் பகுதியை அடைய முயற்சி மேற்கொண்டு வருகின்றோம்," என்றார். மேலும், குழியில் விழுந்த சிறுமிக்கு ஆக்சிஜன் அளிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மீட்பு குழு: தேசிய பேரிடர் மேலாண்மை படையை சேர்ந்த 25 பேர், மாநில பேரிடர் மேலாண்மை படையை சேர்ந்த 15 பேர், இவர்கள் தவிர கோட்புட்ல் காவல்துறை கண்காணிப்பாளர், உதவி காவல்துறை கண்காணிப்பாளர், துணை காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 40 போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதே போல மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ குழுவினரும் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் முகாமிட்டுள்ளனர். தீயணைப்புத்துறையை சேர்ந்த 25 ஊழியர்கள், உள்ளூர் நிர்வாகத்தினர் ஆகியோரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போர்வெல் குழி மிகவும் குறுகியதாக இருப்பதால், மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் மீட்புக்கான சிறப்பு வாய்ந்த கருவிகளைக் கொண்டு சிறுமியை மீட்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் சிக்கல் ஏற்பட்டு விடாதவாறு போர்வெல் குழி அருகே அதற்கு இணையாக சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 12ஆம் தேதி 5 வயது சிறுவன் போர்வெல் குழியில் விழுந்த நிலையில், மூன்று நாட்களாக தொடர்ந்த மீட்பு பணிக்குப் பின்னர் உயிரிழந்த நிலையில் சிறுவன் உடல்மீட்கப்பட்டுள்ளது. எனவே, அது போல சிறுமிக்கு ஆபத்து நேர்ந்து விடக்கூடாது என்பதில் மீட்புக் குழுவினர் கவனமாக ஈடுபட்டுள்ளனர்.
कोटपुतली के किरतपुरा क्षेत्र के बड़ीयाली ढाणी में मासूम बच्ची के बोरवेल में गिरने की खबर चिंताजनक है।
— Sachin Pilot (@SachinPilot) December 23, 2024
प्रशासन से मेरा आग्रह है कि रेस्क्यू ऑपरेशन में तेजी लाकर बच्ची को जल्द से जल्द बोरवेल से बाहर निकाला जाए। मेरी ईश्वर से प्रार्थना है कि उस मासूम बच्ची को सकुशल रखें।
साथ ही…
காங்கிரஸ் கோரிக்கை: இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துப் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், "கிராத்பூர் அருகே பதியாலி தானி பகுதியில் உள்ள போர்வெல் குழியில் சிறுமி விழுந்த சம்பவம் கவலை அளிப்பதாக உள்ளது. அந்த சிறுமி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொள்கின்றேன்.
மாவட்ட நிர்வாகம் சிறுமியை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்த நிலையில் இருக்கும் போர்வெல் குழிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். திறந்த நிலையில் உள்ள போர்வெல் குழிகளை மூட வேண்டும். எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்,"என்றார்.