மதுரை: மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏல அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், அதன் எல்லையை மறுவரையறை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வலியுறுத்தியும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட நாயக்கர்பட்டி தொகுதிக்குட்பட்ட 5 ஆயிரம் ஏக்கர் நிலம் வேதாந்த குழுமத்தின் இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்கத்திற்காக ஏலம் விடப்பட்ட தகவலை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்கள் போராட்டத்தையடுத்து, பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவர்களும் மேலூர் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நாயக்கர்பட்டியை முதன்மையாகக் கொண்டு, தெற்குத் தெரு, வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, அரிட்டாபட்டி, மாங்குளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏல அறிவிப்புக்கு எதிராக நாள்தோறும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Clarification on the Auction of Nayakkarpatti Tungsten Block of Tamil Nadu
— PIB India (@PIB_India) December 24, 2024
Geological Survey of India (GSI) handed over the Geological Memorandum (GM) for Tungsten in Melur – Terkutteru – Muthuvelpatti Areas, Madurai District to State Government Tamil Nadu on 14 Sep 2021, as at…
இந்நிலையில், புதுதில்லியில் உள்ள பத்திரிகை தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நாயக்கர்பட்டி தொகுதிக்குட்பட்ட பகுதிக்குள் பல்லுயிர் பாரம்பரியத் தளம் உள்ளது என்ற அடிப்படையில் இந்த பகுதியை ஏலம் விடுவதற்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. எனவே, டங்ஸ்டன் சுரங்கத்திற்காக, இப்பகுதியை தேர்வு செய்துள்ள இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், தமது முடிவை மறுபரிசீலனை செய்து, உயிரியியல் பன்முகத்தைன்மை வாய்ந்த பகுதிகளை அத்தொகுதியிலிருந்து விலக்கி, இத்திட்டத்தை மறுவரையறை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதியை ஏலம் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனத்திற்கு ஒப்பந்தக் கடிதம் வழங்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் தமிழக அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது' என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, 'இது நாங்கள் எதிர்பார்த்ததுதான். தற்போதுள்ள அறிவிப்பு என்பது தற்காலிக ஒத்திவைப்பே தவிர, நிரந்தரமல்ல. ஆகையால், எங்களுக்குத் தேவை மதுரை மாவட்டத்தில் எங்கும் கனிமச் சுரங்கங்களோ, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் செயல்பாடுகளோ, திட்டங்களோ கூடாது என்பதுதான். மத்திய அரசின் இந்த அறிவிப்பை எங்கள் மக்கள் ஒருபோதும் நம்புவதற்குத் தயாரில்லை. தொடர்ந்து போராடுவோம்' என்றார்.
அரிட்டாப்பட்டி , மீனாட்சிபுரம் கிராமங்களில் உள்ள சுமார் 193.215 ஹெக்டேர் நிலப்பகுதியைத் தவிர்த்து 1800 ஹெக்டேர் அளவிலான நிலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதை ஒன்றிய அரசு தெளிவாக்கியுள்ளது .
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 24, 2024
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கத்தை மொத்தமாக கைவிட வேண்டும் என்பதுதான்… pic.twitter.com/MqAIVf4k9G
"போராட்டம் தொடரும்": இதனிடையே மத்திய அரசின் இந்த முடிவு குறித்து, மதுரை தொகுதி எம்.பி. சு.வெங்கடேசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'டங்க்ஸ்டன் திட்டம்; ஒன்றிய அரசின் சூழ்ச்சி மிகுந்த அறிவிப்பை மக்கள் முறியடிப்பார்கள்.திட்டம் முழுமையாக கைவிடப்படும் வரை மக்கள் போராட்டம் தொடரும்.' என்று அவர் தெரிவித்துள்ளார்.