ஐதராபாத்: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (மே.11) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வரும் செப்டம்பர் மாதத்துடன் பிரதமர் மோடிக்கு 75 வயது நிறைவு பெறும் நிலையில், பாஜகவின் அடுத்த பிரதமர் யார் என்று கேள்வி எழுப்பினார்.
75 வயது நிரம்பியவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்ற விதியை பாஜகவில் வகுத்தவரே பிரதமர் மோடி தான் என்றும் பாஜகவில் அடுத்த பிரதமராக மோடியின் உத்தரவாதங்களை அமித் ஷா நிறைவேற்றுவாரா என்பதை அறிந்து மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். மேலும், மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க செல்லும்போது நாம் அமித் ஷாவுக்கு வாக்களிக்க போகிறோம், மோடிக்கு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவில் தலைமை மாற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், தொடர்ந்து 3வது முறையாக மோடி நாட்டியையும், கட்சியையும் வழிநடத்திச் செல்வார் என்றும் கூறினார்.