பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்து 9 நாட்கள் ஆன நிலையில், இதுவரை அந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் நபரின் புதிய புகைப்படங்களை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ வெளியிட்டு உள்ளது.
மேலும், இரண்டு செல்போன் எண்கள் மற்றும் இமெயில் ஐடி வெளியிட்டு உள்ள என்ஐஏ சந்தேகப்படும் நபர் குறித்து பொது மக்கள் தாமாக முன்வந்து தகவல்களை அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக என்ஐஏ தனது எக்ஸ் பக்கத்தில் "ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண மக்களின் ஒத்துழைப்பை நாடுவதாகவும், பொது மக்கள் 08029510900, 8904241100 என்ற எண்ணை அழைக்கவும் அல்லது info.blr.nia@gov.in க்கு மின்னஞ்சல் செய்யவும். உங்கள் அடையாளம் ரகசியமாக இருக்கும்" என்று பதிவிட்டு உள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகப்படும் நபர் குறித்த இரண்டு வீடியோக்களை வெளியிட்ட என்ஐஏ அதிகாரிகள், இது தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு 10 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்து இருந்தனர்.