பெங்களூரு:கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், கடந்த மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடித்தது. இதில், உணவகப் பணியாளர்கள் உட்பட பலர் காயமுற்றனர். இந்த சம்பவம் பெங்களூரு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடுப்பு சம்பவம் தொடர்பான வழக்கை கடந்த மார்ச் 3ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency - NIA) விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இதைத் தொடர்ந்து, இத்தகைய பயங்கரவாத செயலில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்கும் பணியில், என்ஐஏ அதிகாரிகளும், பெங்களூரு காவல்துறையினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், இச்சம்பவம் தொடர்பாக கைப்பற்றப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு சில நபர்களைத் தேடும் பணியிலும், ஏற்கனவே இதுபோன்ற பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட நபர்கள் இதில் சம்மந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேக கோணத்திலும், பல்வேறு புகைப்படங்களை ஒப்பிட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பை நடத்திய முக்கிய குற்றவாளியான முசாவிர் ஹுசைன் ஷாஜிப் மற்றும் வேறு சில வழக்குகளில் ஏஜென்சியால் தேடப்படும் மற்றொரு குற்றவாளியான அப்துல் மதீன் அகமது தாஹாவையும், என்ஐஏ ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளது. ஆனால், இவர்கள் இருவருமே தற்போது வரை தலைமறைவாக உள்ளனர்.
ஆகவே, குண்டுவெடுப்பு சம்பவத்தில் தொடர்புடைய இந்த முக்கிய குற்றவாளிகளான முசாவிர் ஹுசைன் ஷாஜிப் (30) மற்றும் அப்துல் மதீன் அகமது தாஹா (30) ஆகியோரைப் பிடிக்க, உதவக்கூடிய தகவல்கள் தெரிந்தால் பகிருமாறு, பொதுமக்களிடம் என்ஐஏ கோரியுள்ளது.
அந்த வகையில், குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய இந்த இரண்டு முக்கிய குற்றவாளிகள் பற்றிய தகவலை தெரிவிப்பவர்களுக்கு, தலா ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என என்ஐஏ நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. இந்த வெகுமதி அறிவிப்புடன், குற்றவாளிகள் இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
1. முசாவிர் ஹுசைன் ஷாஜிப் (30):
நிறம்: சிவப்பு (Fair Complexion),
உயரம்:6.2 அடி,
முடி: கருப்பு நிறம்.
நேரான ஹேர் ஸ்டைல், கையில் கருப்பு நிற ஸ்மார்ட் வாட்ச், ஜீன்ஸ், டி-சர்ட் மற்றும் ஷர்ட் ஆடை அணிந்துள்ளார். பெரும்பாலான நேரம் முகமூடி அணிந்தும், சில நேரங்களில் விக் மற்றும் போலி தாடியுடனும் இருப்பார். முகமது ஜுனைத் சையத் அல்லது வேறு பெயரில் போலியான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பார்.