தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை மறுக்க முடியாது - உச்ச நீதிமன்றம் காட்டம்! - neet exam issue - NEET EXAM ISSUE

நீட் தேர்வு வினாத்தாள் கதிவு விவகாரத்தில் மத்திய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் ஜூலை 10 ஆம் தேதி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம் (Image Credit - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 8, 2024, 10:49 PM IST

டெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், வினாத்தாள் கசிவடைந்ததால் பயனடைந்த தேர்வர்களை கண்டறிய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்று தேசிய தேர்வு முகமைக்கு (NTA) கேள்வி எழுப்பி உள்ளது.

நடப்பு கல்வியாண்டில் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான இளநிலை நீட் நூழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியான நிலையில், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்தன. தேசிய அளவில் மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளன. ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள இந்த வழக்குகள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இவ்வழக்குகள் விசாரணைக்கு வந்தது. அப்போது, "வினாத்தாள் கசிவு விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது என்றால், இந்த விஷயம் பெரிய அளவில் பரவியுள்ளது என்றுதான் அர்த்தம். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வின் உயரிய நோக்கத்தை கெடுக்கும் விதத்தில், வினாந்தாள் கசிவு விஷயத்தில் சமரசம் செய்யப்பட்டுள்ளதை மறுக்க முடியாது. அது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாகிறது. வினாத்தாள் எப்படி, எந்த நேரத்தில் கசிந்தது, அவ்வாறு கசிந்த வினாத்தாள் எப்படி பரவியது?" என்று தலைமை நீதிபதி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

"23 லட்சம் மாணவர்கள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில், பயனடைந்துள்ள தேர்வர்களை கண்டறியவதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன?" என்பது குறித்தும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இந்த விஷயத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஜுலை 10 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்று அன்றைய தினம் மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் இவ்வழக்கில் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

ABOUT THE AUTHOR

...view details