பெங்களூரு :நாடு முழுவதும் நேற்று (ஏப்.26) இரண்டாவது கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்றது. கேரளா, கர்நாடகா, மத்திய பிரதேசம், பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம் என 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவை தொகுதிகளில் 14 இடங்களுக்கு நேற்று (ஏப்.26) தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், பெங்களூருவில் குறைந்தளவிலான வாக்குப்பதிவு நடந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சட்டப் பேரவை தேர்தலை காட்டிலும் மத்திய பெங்களூரு, வட மற்றும் தெற்கு பெங்களூரு தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களிக்கவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் வாக்குப்பதிவு நடந்த 14 தொகுதிகளில் சராசரியாக 69.23 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இதில் மத்திய பெங்களூருவில் 52.81 சதவீதமும், வடக்கு பெங்களூருவில் 54.42 சதவீதமும், முறையே தெற்கு பெங்களூருவில் 53.15 சதவீதம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.