விஜயவாடா: மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் 175 தொகுதிகளை கொண்ட ஆந்திர பிரதேச சட்டப் பேரவையில் தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெறும் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், இன்று (ஜூன்.11) தேசிய ஜனநாயக கூட்டணியின் எம்எல்ஏக்கள் அலோசனைக் கூட்டம் விஜயவாடாவில் நடைபெற்றது. கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை, ஜனசேனா தலைவர் பவன் கல்யான் முன்மொழிந்தார்.
இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக சந்திரபாபு நாயுடு தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து கூட்டணி கட்சிகளிடன் ஆதரவு கடிதங்களுடன் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யான் ஆளுநர் மாளிகை விரைந்தனர்.
தொடர்ந்து எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநர் அப்துல் நசீரிடம் வழங்கிய சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்க உரிமை கோரினர். இதையடுத்து நாளை (ஜூன்.11) சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேசம் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஞானவரம் ஏர்போர்ட் அடுத்த கேசரப்பள்ளி ஐடி பார்க்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.