உமாரியா: மத்தியப் பிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள்காப்பகத்தில் கடந்த மூன்று நாட்களில் பத்து யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வன காவலர் வழக்கமான ரோந்து பணிக்கு சென்றுள்ளார். அப்போது காப்பகத்திற்குள் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் சில யானைகள் உடல்நிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டுள்ளன. இதனை கண்ட காவலர் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் அங்கு ஆய்வு மேற்கொண்டபோது, ஏற்கனவே அங்கு நான்கு யானைகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ந்து போயினர்.
இதையும் படிங்க:டெல்லியில் பயங்கரம்: தீபாவளி தினத்தில் மாணவன் உள்பட இருவர் சுட்டுக்கொலை!
அதனை தொடர்ந்து உடலநலம் மோசமாகியிருந்த பிற யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை கொடுத்து வந்த நிலையில், கடந்த புதன் கிழமை இரவு மேலும் நான்கு யானைகள் உயிரிழந்தன. தொடர்ந்து வியாழக்கிழமை இரண்டு யானைகள் அடுத்தடுத்து இறந்தன. இதனால், யானைகளின் இறப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் பிகே வர்மா கூறியதாவது; காப்பகத்தை ஒட்டி வரகு பயிர் போடப்பட்டுள்ளது. இந்த யானைகள் அங்குள்ள பயிர்களை உண்டு வருகின்றன. எனவே, நச்சு கலந்த பயிரை உண்டதால் யானைகள் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். இதனால் அப்பகுதியில் உள்ள பயிர்களின் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம்.
இதற்கிடையே, முன்னெச்சரிக்கையாக அங்குள்ள பயிர்களை அழித்துள்ளோம். காப்பகத்தில் உயர்மட்ட குழுக்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது நான்கு யானைகளுக்கு பிரேத பரிசோதனை முடிந்துள்ளது. மீதி ஆறு யானைகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வர வேண்டும். அதன் பிறகே யானைகளின் மரணத்துக்கு உண்மையான காரணம் தெரிய வரும்'' என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்