மும்பை:மகாராஷ்டிர மாநிலம் மும்பை அடுத்த கட்கோபர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீசிய கடுமையான புழுதிப் புயலால் ராட்சத விளம்பர பேனர் விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ நேரத்தில் அப்பகுதியில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அந்த ராட்சத விளம்பர பலகையின் அடியில் சிக்கிக் கொண்டனர்.
தொடர் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 16 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். மேலும் 70க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், இந்த விபத்தி்ல் விளம்பர நிறுவன உரிமையாளர் பவேஷ் பிஹிண்டே என்பவரை ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக இருந்த அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 16 பேரின் உயிரை பலி கொண்ட விளம்பர பலகை வைப்பதற்கு, பவேஷ் பிஹிண்டே மாநகராட்சியிடம் அனுமதி பெறவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. முன்னதாக இந்த கோர விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் இரண்டு பேரின் சடலங்கள் நேற்று (மே.16) கண்டெடுக்கப்பட்டன.