ஐதராபாத் : தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த ராஜேந்திர நகர் பகுதியைச் சேர்ந்தவர் சபேரா பேகம். இவரது மகள் சபா பேகம் தனது கணவர் அலி ஹுசைன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சவுதி அரேபியாவில் தங்கி உள்ளார். திருமணத்தின் போது வரதட்சனையாக பேசிய தங்கத்தை சபா பேகத்தின் குடும்பத்தினர் வழங்கத் தவறியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அலி ஹுசைன், சபா பேகத்தை அடித்து துன்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும், அலி ஹுசைன் வங்கதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை 20 ஆயிரம் ரியால் பணம் கொடுத்து 3 மாத விசாவில் விலைக்கு வாங்கி வீட்டில் வைத்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.
சபா பேகம், மூன்று குழந்தைகள், வங்கதேசத்தை சேர்ந்த சிறுமி உள்ளிட்டோரை வீட்டை விட்டு வெளியேறாத படி வீட்டுச் சிறையில் அலி ஹுசைன் அடைத்து வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டுச் சிறையில் இருந்து மூன்று குழந்தைகள், வங்கதேச சிறுமி ஆகியோரை கூட்டிக் கொண்டு தப்பித்த சபா பேகம், மக்கா நகரில் இருந்து ஜெட்டா நகருக்கு தப்பித்து அங்கு உள்ள ஒரு விடுதியில் தஞ்சமடைந்து உள்ளதாக தனது தாயாருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார்.