புதுச்சேரி:புதுச்சேரி முழுவதும் 78.57 சதவீத ஓட்டு பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக புதுச்சேரி மாவட்டத்தில் 77.69 சதவீத வாக்கும், குறைந்த பட்சமாக மாஹேவில் 65.11 சதவீத வாக்கும் பதிவாகியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நேற்று(வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்தவகையில், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் உள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதான காரணத்தால் பிரச்சனைகள் எழுந்தன. மற்றபடி, எவ்வித அசம்பாவிதம் நடக்காமல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
புதுச்சேரியில் மொத்தம் 10,23, 699 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3,76431 ஆண் வாக்காளர்களும், 4,27742 பெண் வாக்காளர்களும், 104 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக மாநிலம் முழுவதும் 967 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
நேற்று காலை முதல் இரவு வரை விறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் 78.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாகப் புதுச்சேரி மாவட்டத்தில் 77.69 சதவீத வாக்குப்பதிவும், குறைந்த பட்சமாக மாஹேவில் 65.11 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. மேலும், ஏனாம் மாவட்டத்தில் 76.8% வாக்கும், காரைக்காலில் 75.65% வாக்கும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முக்கிய நிகழ்வுகள்:
- புதுச்சேரி அடுத்த வில்லியனூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுல்தான்பேட்டை மவுனியா மண்டபத்தில் வாக்குப்பதிவு மையம் மின்னணு இயந்திரம் வேலை செய்யாமல் போனதால், வேறொரு மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டது.
- இதேபோல், அரியாங்குப்பம் கிருஷ்ணா விருத்தாம்பாள் திருமண நிலையத்தில் வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது. இதனால், பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது.
- புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அவரது வீட்டின் அருகில் உள்ள திலாஸ் பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் பைக்கில் வந்து தனது வாக்கைப் பதிவு செய்தார்.
- புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
- இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் பிற்பகலில் நெட்டப்பாக்கம் தொகுதி மடுக்கரை அமைந்துள்ள அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
- பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.நமச்சிவாயம் வில்லியனூர் அரசு தொடக்கப்பள்ளியில் வாக்கு செலுத்தினார்.
இதையும் படிங்க:வாக்களிக்க வந்த 3 முதியவர்கள் உயிரிழப்பு.. சேலம் மற்றும் திருத்தணியில் நடந்த சோகம்!