இம்பால் : மணிப்பூரில் மொத்தம் இரண்டு மக்களவை தொகுதிகள் உள்ளன. இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் என இரண்டு தொகுதிகள் உள்ளன. இந்நிலையில் முதல் கட்ட மக்களவை தேர்தலில் இன்னர் மணிப்பூரில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் கூறப்படுகிறது.
இம்பால் கிழக்கு பகுதியில் மொய்ரங் சட்டப் பேரவைக்குட்பட்ட பகுதியில் தமன்போக்பி வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்குப்பதிவு மையம் பகுதியில் அடுத்தடுத்து துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக 23 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும், இம்பால் கிழக்கு பகுதியில் உள்ள தோங்ஜு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு மையம் சூறையாடப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. பாமோன் கம்பு என்ற இடத்தில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் இவிஎம் இயந்திரம் அடித்து நொறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வாக்குப்பதிவு மையத்தில் பாஜக ஏஜென்டுகள் மட்டுமே இருக்க வேண்டும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.