டெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பேசினார். அப்போது அவர், "தமிழக மீனவர்கள் கடந்த 40 ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டதையும், கொலை செய்யப்பட்டதையும், அவர்களின் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து பேச விரும்புகிறேன்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளிவுறவுத் துறை அமைச்சரான ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதத்தில், கடந்த 7 மாதங்களில் மட்டும் 250க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதையும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமான தாக்குதல்கள் 2024ஆம் ஆண்டு நிகழ்ந்துள்ளதையும் அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை இந்த மன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலரின் உடல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. பலர் கொடூரமாக தாக்கப்பட்டு இலங்கை சிறைகளில் பல மாதங்களாக அடைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால், அவர்களின் குடும்பங்களும் பெரும் துயரங்களையும், வலியையும் அனுபவித்துள்ளனர்.
இந்தக் குடும்பங்களை சேர்ந்தவர்களையும் என் உறவினர்களாகவே கருதி அவர்களின் துயரங்களில் நான் பங்கேற்றுள்ளேன். பல குழந்தைகள் தங்களது தந்தையை இழந்தும், பெண்கள் தங்களது கணவரை இழந்தும், பெற்றோர் தங்களது ஒரே மகனை இழந்தும் துயரத்தில் தவித்து வருவதை நான் நேரில் கண்டிருக்கிறேன்.
மிகவும் பின்தங்கிய மாவட்டங்களான இராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பெய்யும் மழையின் அளவு மிக குறைவு. சிறிய அளவில் தான் விவசாயமும் நடந்து வருகின்றது. அங்கே வேறு தொழில்களும் பெரிதாக இல்லாததால் அம்மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்றால் தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும்.