தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் அடுத்தடுத்து 2 இடங்களில் நிலச்சரிவு.. 20க்கும் மேற்பட்டோர் பலி.. உதவி எண்கள் அறிவிப்பு! - kerala landslide - KERALA LANDSLIDE

KERALA LANDSLIDE: கேரளா மாநிலம் வயநாடு அருகே அடுத்தடுத்து இரு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை மூன்று குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளா நிலச்சரிவில் மீட்பு படையினர்
கேரளா நிலச்சரிவில் மீட்பு படையினர் (Credit- Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 30, 2024, 9:30 AM IST

வயநாடு:தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்தநிலையில் நேற்று வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

இதன் காரணமாக இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கல்பட்டாவில் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீசார், தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் தற்போது வரை 3 குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் வயநாடு நிலச்சரிவு பகுதியில் மீட்புப் பணிகளை முடுக்கிவிடவும் மேற்பார்வையிடவும் மாநில அமைச்சர்கள் அடுத்தடுத்து அங்கு விரைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டின் கோவை சூலூர் விமானப் படைத் தளத்திலிருந்து விமானப் படையின் இரண்டு ஹெலிகாப்டர்கள் உடனடியாக வயநாடு பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "மாநில சுகாதாரத்துறை மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகளை திறந்துள்ளது. 8086010833, 9656938689 ஆகியவை உதவி எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. வைத்திரி, கல்பட்டா, மேப்பாடி, மனந்தவாடி மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. அனைத்து நிலை சுகாதாரப் பணியாளர்களும் ஏற்கனவே வரவழைக்கப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இரங்கல்:இதனிடையே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, "வயநாடு நிலச்சரிவு சம்பவம் மிகவும் வேதனையை அளித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன். முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் பேசினேன். தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி இரங்கல்:இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ்தள பதிவில், "பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். சிக்கிக் கொண்டவர்கள் விரைவில் மீட்கப்பட வேண்டும். மீட்பு பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இதில் அனைத்து ஏஜென்சிகளும் ஒன்றிணைந்து ஈடுபட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க:ஹவுரா - சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.. 6 பேர் படுகாயம்!

ABOUT THE AUTHOR

...view details