மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மாலை 5 மணி வரை 58.22 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட 15ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. மொத்தம் 4,136 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 2,086 பேர் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர். 9.7 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வாக்குப்பதிவுக்காக மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் 1,00,186 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. மாலை ஐந்து மணி நிலவரப்படி 288 தொகுதிகளிலும் சராசரியாக 58.22 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்தேர்தலில் பாஜக, சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி, காங்கிரஸ், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணிகளுக்கிடையே நேரடி போட்டி நிலவுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 237 வேட்பாளர்களையும், மஜ்லிஸ்-இ-இத்தேஹாத்-உல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி 17 வேட்பாளர்களையும் நிறுத்தி தனித்து போட்டியிடுகின்றன.