மும்பை :மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் பிரசார கமிட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் அரிப் நசீம் கான், மாநிலத்தின் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் உள்ளிட்டோர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஒரு இஸ்லாமிய வேட்பாளராவது நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்த்ததாகவும் ஆனால் ஒரு இஸ்லாமியர் கூட வேட்பாளராக நிறுத்தப்படாதது மிகுந்த ஏமாற்றத்தை அளித்ததாகவும் தெரிவித்து உள்ளனர்.
மேலும் இது குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் எழுதிய அவர், வாக்கு சேகரிப்பின் பொது மக்கள் இது குறித்து கேட்டால் தன்னிடம் பதில் இல்லாததால் பிரசார கமிட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவ சேனா உத்தவ் அணி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி சரத் பவார் அணி இணைந்து மகா விகாஷ் அகாதி என்ற கூட்டணியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு உள்ளது.
இந்த கூட்டணி சார்பில் மக்களவை தேர்தலில் ஒரு இஸ்லாமிய வேட்பாளர் கூட களமிறக்கப்படவில்லை. இதன் காரணமாக கட்சித் தலைமை மீது அதிருப்தியில் இருந்த முகமது அரிப் நசீம் கான், காங்கிரஸ் பிரசார கமிட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார். இது குறித்து பேசிய அவர், சமூக வேறுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களுடன் இணைந்து பயணிப்பதே காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் என்றார்.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளில் ஒன்றில் கூட சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படாததால் அனைத்து சிறும்பானமை சமூக அமைப்புகள் மற்றும் தலைவர்கள், பொது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரிப் நசீம் கான் தெரிவித்தார்.