டெல்லி:18வது நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மதுரை எம்பி சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் பேசியதாவது, "நாடாளுமன்றத் தேர்தலின் தீர்ப்பை உள்வாங்கிக் கொண்டதாக இந்த அரசினுடைய உரை அமையவில்லை.
பாஜக கைகளில் பெரும்பான்மையைக் கொடுத்தால் வாக்களிக்கும் உரிமை கூட இருக்காது என்ற அச்சத்தை இந்திய மக்கள் வெளிப்படுத்தி இருப்பது தான் இந்த தேர்தலினுடைய தீர்ப்பு. கடைசி நாளில் பிரதமர் இந்த அவையில் பேசிய பேச்சை நான் நினைவுபடுத்த வேண்டுமென்று நினைக்கிறேன்.
'தேர்தலுக்குப் பிறகு இந்த அவையில் எதிர்க்கட்சிகளுக்கு இடமில்லை; பார்வையாளர் மாடத்தில் தான் எதிர்க்கட்சிகளுக்கு இடம்' என்று பேசினார். ஆனால், இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவரின் உரையை இரண்டு மணி நேரம் உட்கார்ந்து கேட்க வைத்திருக்கிற பெருமையை இந்திய வாக்காளர்கள் நிலைநிறுத்தியிருக்கிறார்கள்.
பிரதமருடைய அன்றைய பேச்சு முழுக்க முழுக்க அயோத்தியைப் பற்றி இருந்தது. ஆனால், இன்றைக்கு குடியரசுத் தலைவரின் உரையில் அயோத்தி என்ற சொல்லே இல்லை. உங்களுக்கு வாக்களிக்காவிட்டால் அயோத்தியையும் கைவிடுவீர்கள், ஆண்டவனையும் கைவிடுவீர்கள் என்பது தான் குடியரசுத் தலைவர் உரையின் மூலம் இந்த நாட்டு மக்களுக்கு சொல்லியுள்ள செய்தி" என தெரிவித்தார்.
மேலும் "கோயில்களை வாக்குச்சாவடியின் வாசலாக பாஜக பார்க்கிறது. கோயில்கள் வாக்குச்சாவடிகளின் வாசல்கள் அல்ல, அது ஆன்மீகத்தின் உறைவிடம் என்பதை உங்களுக்குச் சொல்லியிருக்கிறார்கள் அயோத்தி மக்கள். செங்கோல், மணிமுடி, சிம்மாசனம் இதையெல்லாம் தகர்த்துவிட்டுத் தான் இந்திய ஜனநாயகம் இந்த அவையிலே கால் ஊன்றியது.