புதுடெல்லி:மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு வரும் 4ஆம் தேதி செல்வதற்கு அரசியல் சட்டரீதியாக உரிமை உள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய உ.பி மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய், "ரேபரேலி மக்களவை தொகுதி எம்பி ராகுல் காந்தி மக்களவை எதிர்கட்சித் தலைவராகவும் உள்ளார். அவர் வரும் 4ஆம் தேதி சம்பல் பகுதிக்கு செல்கிறார். அங்கு அவர் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார். அங்கு செல்வதற்கு அரசியல் சட்டரீதியாக அவருக்கு உரிமை உள்ளது,"என்றார்.
மேலும் பேசிய அஜய் ராய், "சம்பல் பகுதியில் மாநில காவல்துறை எதை மறைக்க விரும்புகிறது? யாரும் அங்கு செல்லக் கூடாது என்று ஏன் அவர்கள் தடுக்கின்றனர்? உத்தரபிரதேசத்தில் இது ஒரு பாணியாகவே கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு முன்பு ஹத்ராஸ், உன்னோவ், லக்கிம்பூர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சென்றபோது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தடுக்கப்பட்டனர். இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பான வழக்குகளிலும் எதிர்கட்சிகள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபணம் ஆகின. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்துக்கு சென்று அங்கு அமைதி நிலவ வேண்டும் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். எனவே இங்கு செல்வதில் என்ன தவறு இருக்கிறது,"என்று கேள்வி எழுப்பினார்.
மேற்கு உத்தரபிரதேசத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட சம்பல் பகுதிக்கு கடந்த 2ஆம் தேதி மாநில காங்கிரஸ் தலைவர் ராய் தலைமையின காங்கிரஸ் குழுவினர் சென்றனர். ஆனால், அவர்களுக்கு அங்கு செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த சூழலில் சம்பல் பகுதிக்கு ராகுல் காந்தி செல்வது குறித்து மறுபரிசீலனை செய்யும்படி உபி போலீசார் கூறியுள்ளனர்.