பெங்களூரு:கர்நாடக மாநிலம் ஹசன் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பிரஜ்வெல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோ விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி. ரேவண்ணா ஆகியோருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், சிறப்பு புலனாய்வு குழுவின் முன் விசாரணைக்கு ஆஜராகாத பட்சத்தில் எச்.டி ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனிடையே பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ள ராஜாங்க ரீதியிலான பாஸ்போர்ட்டை ரத்து செய்யக் கோரி பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதினார்.
தன்னிடம் உதவி கேட்டு வந்த ஆயிரக்கணக்கான பெண்களை பிரஜ்வெல் ரேவண்ணா பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி அதை வீடியோவாக பதிவு செய்ததாக கூறப்படும் தற்போது அந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக் கோரி கர்நாடகா மாநில மகளிர் ஆணைய தலைவர், மாநில அரசு மற்றும் முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார்.