புதுடெல்லி:ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் விவசாயிகள் நெல் அறுவடைக்குப் பின்னர் வைக்கோலை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு நேரிடுகிறது. இந்த நிலையில் வைக்கோல் எரிப்பை தடுக்காமல் அலட்சியமாக இருந்ததாக இருமாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்று மாசை ஏற்படுத்தும் வைக்கோல் எரிப்பை தடுப்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அஹ்ஸானுதீன் அமானுல்லாஹ், மற்றும் ஏ.ஜி.மஸீஹ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதி அபய் எஸ் ஓகா, "தடையை மீறி வைக்கோல் எரிப்பவர்கள் மீது வழக்கு தொடராமல் இருப்பது என்ன காரணம்? வழக்கு தொடருவதற்கு கூட வலிமை இல்லாத அரசு என்று வேண்டுமானால் நீங்களே அறிவித்துக் கொள்ளுங்கள். முழுவதும் மதிக்காமல் இருப்பதையே பஞ்சாப், ஹரியானா அரசுகளின் செயல்பாடுகள் உணர்த்துகின்றன.
எனவே, காற்றை மாசுபடுத்தும் வகையில் வைக்கோலை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பஞ்சாப், ஹரியானா அரசுகள் மீது காற்று தர மேலாண்மை அமைப்புக்கான ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறையை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத ஹரியானா அரசின் சார்பில் அதனை தலைமை செயலாளர் வரும் 23ஆம் தேதி ஆஜர் ஆக வேண்டும். இந்த விஷயத்தில் காற்று தர மேலாண்மை அமைப்புக்கான ஆணையமும் செயலற்ற நிலையில் இருக்கிறது. பஞ்சாப் அரசு விஷயத்திலும் இதே போன்ற நிலைதான் உள்ளது," என்று கூறினார்.
இதையும் படிங்க:சட்டென்று மாறிய வானிலை.. டெல்லியில் திடீர் மழை - காற்று மாசு சற்று நீங்கலாக காட்சியளிக்கும் தலைநகரம்!
அப்போது குறுக்கிட்ட பஞ்சாப் அரசு வழக்கறிஞர், "பஞ்சாப்பில் நெல் விளைவிப்பதில் பெரும் அளவிலான நிதி சார்ந்த விஷயங்கள் இருக்கிறது," என்று கூறினார். உடனே குறுக்கிட்ட நீதிபதி அபய் எஸ் ஓகா,"வைக்கோல் எரிக்கப்படுவதை தடுக்க சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், 2013ஆம் ஆண்டு பஞ்சாப் அரசு வெளியிட்ட அறிவிக்கையை அமல்படுத்துவது பற்றி சொல்லுங்கள். அதில் ஏதேனும் நிதி விஷயங்கள் இருக்கிறதா? நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதில் என்ன மாதிரி நிதி விஷயங்கள் உள்ளன,"என்று கேள்வி எழுப்பினார். அப்போது வாதிட்ட பஞ்சாப் அரசு வழக்கறிஞர்,"நிதி சார்ந்த விஷயங்கள் ஏதும் இல்லை. விவசாயிகள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துகின்றனர். அவர்களிடம் ராஜதந்திர ரீதியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டி இருக்கிறது,"என்றார்.
உடனே குறுக்கிட்ட நீதிபதி அபய் எஸ் ஓகா,"அப்படியென்றால் நீங்கள் காற்று தர மேலாண்மை அமைப்புக்கான ஆணையத்திடம் முறையிட்டு, அதன் உத்தரவுகளில் மாற்றம் செய்யும்படி கோரிக்கை விடுங்கள். யார் மீதும் வழக்கு தொடர முடியவில்லை. எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆகவே உத்தரவில் மாற்றம் செய்யுங்கள் என்று கூறுங்கள்,"என்றார்.
இதனைத் தொடர்ந்து வாதிட்ட பஞ்சாப் அரசு வழக்கறிஞர்,"இது மாநில அரசின் கடமை என்பதை உணர்ந்திருக்கின்றோம். கடமையை செய்வதில் இருந்து பின்வாங்கவில்லை. கொஞ்சம் சவாலான பணியாக இருக்கிறது. எங்களுக்கு ஒருவாரம் அவகாசம் கொடுங்கள்,"என்றார். அவகாசம் கொடுக்க மறுத்த உச்ச நீதிமன்றம் பஞ்சாப் தலைமை செயலாளர் வரும் 23ஆம் தேதி ஆஜராக உத்தரவிட்டது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்