போபால்: மத்திய இணை அமைச்சராக உள்ள எல்.முருகன், மத்திய பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவைக்கு போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நாட்டின் 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை (பிப்.15) இறுதி நாளாகும்.
இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலங்களவை வேட்பாளாராக தற்போது மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன் பாஜக தரப்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த எல்.முருகனின் மாநிலளங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்திற்கான மாநிலங்களவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு மீண்டும் தேர்வாகிறார்.