கொல்கத்தா: மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி பெண் மருத்துவர் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மருத்துவனை வளாகத்திலேயே கொடூரமாக கொல்லப்பட்டார்.
அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடல் பாகங்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்ததும் பிரேதப் பரிசோதனையில் தெரிய வந்தது. உலக அளவில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பான வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி அண்மையில் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், பெண் மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டும், மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் நடவடிக்கையை உடனே மேற்கொள்ள அரசை வலியுறுத்தியும் நேற்று (ஆகஸ்ட் 27) தலைமைச் செயலகம் நோக்கி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் பங்கேற்றவர்களை கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து, மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சியான பாஜக இன்று மாநிலம் தழுவிய 12 மணி நேர முழு அடைப்பு போராட்டம் (Bangla Banth) நடத்தி வருகிறது. இப்போராட்டத்தில் மேற்கு வங்க பாஜக மாநிலத் தலைவரும், எம்.பி.யுமான சுகந்தா மசுன்தர் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
இதுகுறித்து சுகந்தா மசுன்தர் கூறும்போது, "மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் இல்லை. மாநில காவல் துறை, பாஜகவின் ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்துவதிலேயே குறியாக உள்ளது. அவர்களால் குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை. மாறாக பாஜக தலைவர்களை கைது செய்கின்றனர். இந்த நிலையில், பெண் மருத்துவர் படுகொலையை கண்டித்து, நாளை முதல் (ஆகஸ்ட் 29) ஒரு வாரம் பாஜகவினர் மேற்கொள்ளவுள்ள தர்ணாவுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்" என்று சுகந்தா மசுன்தர் தெரிவித்தார்.