பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் குரூப் சி மற்றும் டி பதவிகளுக்கு 100 சதவீத கன்னடர்களை பணியமர்த்துவது கட்டாயமாக்கும் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவை விரைவில் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து சட்டமாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் விதமாக கர்நாடக மாநில வேலைவாய்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தனியார் நிறுவனங்களில் உள்ள குரூப் சி மற்றும் டி பிரிவுகளில் 100 சதவீதமும், நிர்வாக பதவிகளில் 50 சதவீதமும் நிர்வாகமற்ற பதவிகளிலும் 75 சதவீதமும் உள்ளூர் மக்களை நியமிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர் மற்றும் 15 ஆண்டுகள் மாநிலத்தில் வசிக்கும் மற்றும் கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும் மற்றும் எழுதவும் திறன் கொண்டவர் மற்றும் நோடல் ஏஜென்சியால் நடத்தப்பட்ட தேவையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இவர்களுக்கு மட்டுமே நிறுவனங்களின் நிர்வாக பணிகளில் 50 சதவீதமும் நிர்வாகமற்ற பதவிகளில் 75 சதவீதமும் பணி வழங்க வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் வேலை வாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
மசோதாவில் உள்ள விதிகளைப் பின்பற்றாத நிறுவனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும், மேலும் உள்ளூர் ஆட்களை வேளைக்கு அமர்த்தாத நிறுவனங்களுக்கு மசோதாவின் படி ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
விரைவில் சட்டபேரவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்து சட்டமாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதேநேரம், இந்த சட்டத்திற்கு மாநில ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் கிடைக்குமா என்ற கேள்விகளும் எழுகின்றன. இதற்கு முன்னரும் குஜராத், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் நீதிமன்றங்கள் மூலம் அவை ரத்து செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஓமனில் சரக்கு கப்பல் கவிழ்ந்து 13 இந்தியர்கள் மாயம்! மீட்பு பணியில் கடற்படை! - Oman Ship Sink 13 indians missing