பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் ஜாமீன் கோரி எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் எச்.டி.ரேவண்ணா மனுத் தாக்கல் செய்துள்ளார். அதேநேரம் ரேவண்ணாவின் மனுவை எதிர்த்து சிறப்பு புலனாய்வுக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு புலனாய்வு குழுவின் காவலில் இருக்கும் எச்.டி ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரிக்கும் பட்சத்தில் உயர் நீதிமன்றத்தை அணுக ரேவண்ணா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஆபாச வீடியோ விவகாரத்தில் எச்.டி ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், நேற்று (மே.5) சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 நாட்கள் காவலில் எடுத்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆபாச வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புடைய வீடியோக்களை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பகிர வேண்டாம் என்றும் அதையும் மீறி வேண்டுமென்றே பகிரும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆபாச வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சட்ட உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும் அந்த எண்கள் மூலம் தொடர்பு கொண்டு சட்ட உதவிகள் பெறுபவர்கள் அடையாளங்கள் மற்றும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.