தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரம்; ஷோபா கரந்த்லாஜே மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை! - Shobha Karandlanje - SHOBHA KARANDLANJE

Shobha Karandlanje Case: தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு எதிராக, காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Shobha Karandlanje Case
Shobha Karandlanje Case

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 22, 2024, 9:54 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பெங்களூருவில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில், மார்ச் 1ஆம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தது. இதில் உணவகப் பணியாளர்கள் 2 பேர் உள்பட 10 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, கடந்த மார்ச் 19-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, "பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களால்தான் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள் வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி எடுத்து, உணவகத்தில் குண்டு வைத்ததாகவும்" கூறியுள்ளார்.

மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் இந்த கருத்து, பெரும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் பிரமுகர்களும், மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மதுரை சைபர் கிரைம் போலீசார், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக சார்பில் மார்ச் 20ஆம் தேதி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு, ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மின்னஞ்சல் மூலம் புகார் கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதன் அடிப்படையில், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்ஜாலே மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து, அதன் விவரத்தை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என கர்நாடக மாநில தேர்தல் அதிகாரிக்கு இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

இதனை அடுத்து, கர்நாடக மாநில தேர்தல் அதிகாரிகள் காவல்துறையினரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்த்லாஜே, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி கிருஷ்ண எஸ்.தீட்சித் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் ஷோபா கரந்த்லாஜே தெரிவித்த கருத்துக்கு கடும் அதிருப்தி தெரிவித்தும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜேவுக்கு எதிராக காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணை நடத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க:விளவங்கோடு இடைத்தேர்தல்; பாஜக வேட்பாளராக வி.எஸ்.நந்தினி போட்டி! - BJP Candidate V S Nanthini

ABOUT THE AUTHOR

...view details