பெங்களூரு:கர்நாடக மாநிலம், மைசூருக்கு உட்பட்ட வருணா ஹுப்ளி பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் மஞ்சுநாத். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியும் சில ஆண்டுகளுக்கு முன் ஒரே பள்ளியில் படித்து வந்தபோது காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், சிறுமியின் தாயார், 2023, பிப்ரவரி 15 ஆம் தேதி, மைசூருக்கு உட்பட்ட உதயகிரி காவல் நிலையத்தில் மஞ்சுநாத் மீது புகார் அளித்தார்.
அதில், 'தமது மகளை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்று, அவளை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்புகாரின் அடிப்படையில் மஞ்சுநாத்துக்கு எதிராக போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆனால், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதன் விளைவாக, திருமணத்துக்கு முன்பே அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. மேலும், மஞ்சுநாத் மீதான அவரது காதலும் குறையாமலேயே இருந்தது. இதனை கருத்தில் கொண்டு, இவ்வழக்கில் மஞ்சுநாத்துக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. ஜாமீனில் வெளியே வந்தவர், தான் பாலியல் வன்கொடுமை செய்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததும் மஞ்சுநாத் மீண்டும் சிறைக்கு திரும்பினார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த வழக்கை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.