பெங்களூரு:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கடந்த 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் நடந்த சோதனையில் தங்கம் மற்றும் வைர நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள், விலையுயர்ந்த செருப்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்குள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டன. இதற்கிடையே 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானார்.
அதனைத் தொடர்ந்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே, ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட வேண்டுமெனவும், அதன் மூலம் வரும் பணத்தை நலத் திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் கோரி ஆர்டிஐ ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி என்பவர் பெங்களூரு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதேநேரம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அரசால் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பொருட்களில் தனக்கு உரிமை உண்டு எனவும், அவற்றை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, ஜெயலலிதாவின் நகை உள்ளிட்ட உடைமைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.