பெங்களூரு : கர்நாடகாவில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சிக்ரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் மசோதாவை சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மசோதாவின் படி மாநிலத்தில் சிக்ரெட் விற்பனைக்கான வயதை 18ல் இருந்து 21 வயதாக உயர்த்துவதாக தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மசோதா அவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சிகரெட் விற்பனைக்கான குறைந்தபட்ச வயது வரம்பு 21ஆக விரைவில் அமல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, அவையில் பேசிய கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ், இந்த மசோதாவின் மூலம் மாநிலத்தில் 21 வயது குறைந்தவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வது தடுக்கப்படுவதாக கூறினார்.